முதல் மின்னணுச் சிப்பைப் பெற்றுக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய மின்னணுச் சிப்கள் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் செமிகண்டக்டர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

அப்போது இஸ்ரோ செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட 32 பிட் மைக்ரோபிராசசர் சிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிக்கும் திட்டத்தைத் தொடங்கியதாகக் கூறினார். மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தியாவில் மின்னணுச் சிப்கள் உற்பத்தி செய்துள்ளது நாடே பெருமிதம் அடையும் தருணம் என்று தெரிவித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் சிறிய மின்னணுச் சிப்கள் உலகில் மாபெரும் மாற்றத்தை முடுக்கி விடும் நாள் நெடுந்தொலைவில் இல்லை எனத் தெரிவித்தார். சிப்கள் தயாரிக்கும் திட்டத்தை நாம் தாமதமாகத் தொடங்கியிருந்தாலும், இனி யாராலும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டுக்கு ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் வந்துள்ளது இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டு நிலக்கரியாலும் எண்ணெய்யாலும் வடிவமைக்கப்பட்டதாகவும், இந்த நூற்றாண்டின் உண்மையான ஆற்றல் செமிகண்டக்டர்களில் பொதிந்து கிடப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *