திமுகவுக்கு செக் வைக்கிறதா தவெக.. வட தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!

தவெகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும், அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதோடு மட்டும் இல்லாமல், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்துக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

அவ்வளவுதான்… இப்போது அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்கே இதுதான்! வடமாவட்டங்களில் வன்னியர் வாக்குகளை குறிவைக்கிறதா தவெக? இல்லை, சந்தீப் ஆனந்தின் சமூகப்பணி மற்றும் செல்வாக்கை கட்சி பயன்படுத்தப் போகிறதா? அப்படி என்ன கணக்கு போட்டு இந்தப் பதவி கொடுக்கப்பட்டது? இதற்குப் பின்னால் இருக்கும் தவெகவின் அரசியல் நோக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்…

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்த நிலையில், அதிமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகினர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 15 பேருக்கு தவெகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், திமுக கொள்கை பரப்புச்செயலாளர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தவெக துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வன்னியர்களின் அடையாளமாகக் காணப்படும் அவருக்கு திமுகவில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற கருத்து நிலவி வந்த நிலையில், கடந்த ஜூலை 4-ம் தேதி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் மகன் என்பதால், இவரது வருகை அப்போதே அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. ஆனால் இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் பதவி… அதைவிட பெரிய அரசியல் பேசுபொருளாகி மாறியிருக்கிறது.

வன்னியர் சமூகத்துடன் தொடர்புடைய சமூகப்பணிகள் மற்றும் நற்பணிகளில் சந்தீப் ஆனந்த் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வன்னியர் சமூகத்தினரிடம் அவருக்கு இருக்கும் தொடர்புகளை தவெக அரசியல் ரீதியாக பயன்படுத்தப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வட மாவட்டங்களில் பாமகவின் தாக்கம் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பாமகவினால்தான் வட மாவட்டங்களில் வெற்றி என அதிமுகவின் வெற்றிக்கான காரணம் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதே போன்று, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்க திட்டமிட்டு வருகிறார். இந்தச் சூழலில்தான், சந்தீப் ஆனந்திற்கு தவெகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி வாக்கு கணக்கா?” அல்லது “அரசியல் விரிவாக்கமா?” என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொழில், கல்வி, சமூகப்பணி என பல்வேறு துறைகளில் இயங்கி வந்தவர் சந்தீப் ஆனந்த். அக்கார்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநராகவும், பாரத் கல்விக் குழுமத்தின் தலைவராகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ, சட்டம் மற்றும் பிஎச்டி உள்ளிட்ட படிப்புகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நாசாவில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதும் இவரது கனவாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்தக் கனவு வேறு பாதைக்கு திரும்ப… இப்போது அரசியல் களத்தில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். ஜார்ஜியாவில் ஒரு குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவிய சம்பவத்துக்காக அந்நாட்டின் உயரிய விருது கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசா கனவு… தொழில் வாழ்க்கை… சமூகப்பணி… இப்போது அரசியல். அப்பாவைத் தொடர்ந்து அரசியலுக்கு வராமல், விஜய் தலைமையிலான தவெகவை தேர்வு செய்திருக்கிறார் சந்தீப் ஆனந்த்.

இதனால் இன்னொரு கேள்வியும் எழுகிறது… தந்தை ஒரு கட்சியில்… மகன் வேறு கட்சியில். வரும் தேர்தல் களத்தில் தந்தை ஜெகத்ரட்சகனின் அரசியல் பாதைக்கு எதிராக சந்தீப் ஆனந்த் களமிறங்குவாரா? அல்லது தனக்கென தனி அரசியல் அடையாளத்தை உருவாக்குவாரா?…அதிலும் முக்கியமாக… வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளை தவெக பக்கம் கொண்டு வருவதில் சந்தீப் ஆனந்தின் பங்கு என்னவாக இருக்கும்? இவை அனைத்துக்கும் வரும் தேர்தல் களம்தான் பதில் சொல்லப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *