இன்று திருச்சி, புதுக்கோட்டைக்கு பறவைகள் பூங்காவை திறந்துவைக்கிறார் – உதயநிதி!

Advertisements

திருச்சி:

திருச்சி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், திருச்சி மக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுப்போக்கும் வகையிலும் திருச்சி கரூர் சாலை கம்பரசம்பேட்டையில் அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பறவைகள் பூங்கா திருச்சி மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது. பறவைகள் பூங்காவைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதற்காக அவர் இன்று மதியம் சென்னையிலிருந்து விமானம்மூலம் திருச்சி வருகிறார். அவருக்குத் திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

பின்னர் அய்யாளம்மன் படித்துறை பகுதிக்குச் சென்று பறவைகள் பூங்காவைத் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப்குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தப் பூங்காவில் செயற்கையான அருவிகள் போன்ற அமைப்பும் உள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகையிலான பறவைகள் வளர்க்கப்பட இருக்கின்றன.

இதுமட்டு மல்லாமல் குழந்தைகள் தெரிந்து கொள்ள 5 வகையான நிலங்கள் அதாவது குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் மற்றும் பாலை போன்ற அமைப்புகளும் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதனைக் குழந்தைகளுக்குப் புரியும் வகையில், மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலை வனம் போன்ற இடங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளது.

புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், எனப் பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 50 பேர் உட்காரும் வகையில் அறிவியல் பூர்வ படங்கள் திரையிடப்படும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்தப் பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார்மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் மகன் கணேஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *