
திண்டுக்கல்லில் ஒரே பிரசவத்தில் குறைந்த எடையுடன் பிறந்த மூன்று குழந்தைகள், தாயையும் சேய்களையும் உயிருடன் மீட்டெடுத்து சிறப்பாகப் பராமரித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
திண்டுக்கல் சிலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சசி – ரிஷா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த ஆண்டுத் திருமணம் நடைபெற்றது. சசி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரிஷா கர்ப்பம் தரித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாதாந்திர பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் ரிசாவிற்கு தைராய்டு இருப்பதாகவும் அதே போல் மூன்று குழந்தைகள் கருதரித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரிசாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரசவத்திற்கு அனுமதித்தபோது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு இருப்பதனை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைமூலம் கடந்த மாதம் 21ஆம் தேதிமகப்பேறு சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சைமூலம் மூன்று குழந்தைகளையும் உயிருடன் மீட்டனர்.
மேலும் பிறந்த மூன்று குழந்தைகளும் சாதாரணமாகக் குழந்தைகள் இருக்கும் எடையைவிட மிகவும் குறைந்த அளவில் இருந்துள்ளன. ஒரு கிலோ 250 கிராம், ஒரு கிலோ 50 கிராம், ஒரு கிலோ 300 கிராம் என்ற விகிதத்தில் குழந்தைகள் இருந்துள்ளன. குழந்தைகளைக் குழந்தைகள் நல மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துச் செயற்கை சுவாசம் மற்றும் நுரையீரல் வளர்ச்சி ஆகிய சிகிச்சைகள் அளித்துப் பாதுகாத்தனர். மேலும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய செவித்திறன் மற்றும் இதய நோய், மூளை பாதிப்பு ஆகிய பரிசோதனைகள் போன்றவை செய்யப்பட்டது.
சிசுக்களின் எடையை அதிகரிக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கிமூலம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கிக் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவினர். அதேபோல் குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எவ்வாறு எடையை அதிகரிக்க வேண்டும். அதேபோல் நோய் தொற்று வராமல் தவிர்ப்பது என்பது குறித்தும் ரிசாவிற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறை மாதம், குறைந்த எடையில் பிறந்த மூன்று குழந்தைகளும் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேலாகத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவர்களைக் கண்காணித்து வந்துள்ளனர்.
அதேபோல் குழந்தைகளின் எடை அதிகரிக்க கங்காரு பராமரிப்பு முறை மூலமாகக் குழந்தையைத் தாயின் நெஞ்சுப் பகுதியோடு வைத்து அணைத்தது போல் தாயின் வெப்பநிலை குழந்தைக்குச் சீராகக் கிடைக்கும் வழியில் குழந்தையைப் பராமரிப்பது மற்றும் தாய்ப்பால் வழங்குவது போன்றவற்றை மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். தற்போது குழந்தைகள் ஆரோக்கிய நிலைக்கு வந்துள்ளனர்.மூன்று குழந்தைகள், தாயையும் சேய்களையும் உயிருடன் மீட்டெடுத்து சிறப்பாகப் பராமரித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
இதுபற்றி மருத்துவர்கள் கூறும்பொழுது, அரசு மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்று தனியாகப் பிரிவை ஏற்படுத்திக் குறைமாதம் மற்றும் குறைந்த எடைகளில் பிறக்கும் குழந்தைகளைப் பராமரித்து வருவதாகவும் அதேபோல் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தாய்மார்களுக்கும் பிரத்யேகமாக அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன எனவும் தெரிவித்தனர்.


