Fraudulent: லட்சங்களைச் சுருட்டிய தம்பதி சிக்கியது எப்படி?

Advertisements

தொழிலில் முதலீடு செய்தால் கொழுத்த லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 80 லட்சம்வரை மோசடி செய்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்…

நேர்மையான அணுகுமுறை, நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், பேராசை நபர்கள் இந்த மூன்றை மூலதனமாக வைத்து ஏமாற்றும் சம்பவங்கள் அதிகளவில் அதிகரித்து வருகின்றன. அதுவும், கொடுக்கும் பணத்தை டபுளாகத் தருவேன் என்று கூறினால் வேண்டாம் எனவா கூற போகிறோம்.

அப்படி நம்பிக்கையாகக் கூறி, நைசாகப் பல லட்சங்களைச் சுருட்டி தலைமறைவில் உல்லாச வாழ்வை வாழ்ந்து வந்த தம்பதி கடலூர் போலீசாரிடம் வசமாகச் சிக்கி உள்ளனர். பலே தம்பதி யார்? அப்பாவி மக்களுக்கு நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜன். இவருக்குத் தமது நண்பரும் அதே பகுதியைச் சேர்ந்தவருமான ஐயம் பெருமாள் என்பவர்மூலம் பெரம்பலூரை ரோஸ் நகரை சேர்ந்த 55 வயதான ரவிசந்திரன் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அதே ஊரில் ஒரு டிப் டாப் ஆசாமியாக வலம் வந்துவரும் ரவிச்சந்திரன் தான் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியற்றுவதாகவும், பலரிடம் பணம் பெற்று தொழிலில் முதலீடு செய்து கொழுத்த லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார்.

மேலும், தற்போது தமது நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடுதல் பணம் தேவைப்படுவதாகவும், யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு டபுள் மடங்கு வெறும் ஆறே மாதத்தில் திருப்பித் தருவேன் என நைசாகப் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

மேலும், நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கும் டபுள் மடங்கு வருமானம் ஈட்டி தருவேன் என நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார். அப்படி, பெற்று தரும் பட்சத்தில் தமக்கு 10 சதவீதம் கமிஷன் மட்டும் தந்தால் போதும் என அப்பாவிபோலப் பேசி உள்ளார்.

இதை நம்பிய சுந்தர்ராஜன், ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி கற்பகம் உள்ளிட்ட இருவரிடமும் சுமார் 20 லட்சத்தை நேரடி மற்றும் வங்கியென இரு வழிகளிலும் கொடுத்துள்ளார்.

இவர் மட்டுமில்லாமல் இவருடன் சேர்த்து ராம நத்தம் பகுதியைச் சேர்ந்த ஐயம் பெருமாள், ராஜு கண்ணன், தச்சூரை சீதாராமன் என இவர்கள் அனைவரிடமும் சேர்த்து சுமார் 80 லட்சம்வரை இந்தத் தம்பதி கறந்துள்ளனர்.

ஆனால், சொன்னபடி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் எந்தத் தகவலும் ரவிசந்திரனிடமிருந்து பணம் குறித்து எந்தத் தகவலும் இல்லை, எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனைவரும் சேர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தனர்.

இந்த நிலையில், புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துத் தம்பதியைத் தேடி வந்தனர். அவர்களின் தேடுதல் வேட்டையில் இருவரும் வசமாகச் சிக்கிய நிலையில். போலீசார் அவர்களைக் கஸ்டடியில் எடுத்து முறையான விசாரணையைத் துவக்கினார்.

இந்த விசாரணையில் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும், உல்லாசமாக வாழவும் தான் பணத்தை உபயோகித்ததாகவும் கூறி போலீசாரை அதிர வைத்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *