
விமானம் வேகமாகக் குலுங்குகிறது. விமானிகளின் நடுங்கும் குரல் கேட்கிறது, அனைத்தும் மங்குகிறது. எங்கும் புகை சூழ்ந்துகொண்டு விமானம் உடைந்து நொறுங்குகிறது. அப்புறம் எதுவும் தெரியவில்லை என்பதே விஸ்வாஸ் குமார் தனது உறவினரிடம் கூறியிருக்கிறார்.
உயிர் பிழைத்த விஸ்வாஸ் குமார் அமர்ந்திருந்தது 11ஏ இருக்கை என்பதுதான். இது எப்போதும் அதிர்ஷ்டமான இருக்கை என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பாதுகாப்பான இருக்கை என்று உள்ளதா?
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், அவசர கதவுக்கு அருகில் இருக்கும் 5 வரிசைகளுக்குள் இருக்கும் இருக்கைகள் பாதுகாப்பானவை. ஏதேனும் அவசரம் என்றால், இந்த இருக்கையில் இருப்பவர்கள் வேகமாக வெளியேற முடியும் என்பதே காரணம். ஆனால், சில நிபுணர்களோ, விமானத்தின் பின்பகுதியில் இருக்கும் நடு இருக்கைகள்தான் பாதுகாப்பானவையாக இருந்திருப்பதாக கடந்த கால விபத்துகள் மூலம் அறிந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.ஆனால் உண்மையில் உயிர் பிழைப்பது என்பது விமான விபத்து நிகழ்வதைப் பொறுத்துத்தானே தவிர, இருக்கை அல்ல என்பதுதான் பொதுவான கருத்தாக உள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தின் விமானி ‘மே டே’ சமிக்ஞை அனுப்பிய சில விநாடிகளில், விமானத்துக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடா்ந்து, சில நிமிடங்களில் மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் பலியாகினர்.
கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்கலை பெற்று ஆய்வு செய்வதற்கு 15 நாள்கள் ஆகும். அதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.கருப்புப் பெட்டிகள் மீட்டால்தான் எதிர்காலத்தில் விபத்துகளைத் தடுப்பதற்கான விலைமதிப்பற்ற முன்னெச்சரிக்கைகளுக்கான தகவல்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



