சேலம் மல்லமூப்பம்பட்டி ரோட்டில் உள்ள குடோன் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவ கணேஷ் (45). இவர் வீட்டின் அருகே குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு அந்த குடோனில் இருந்து கரும்பு புகை கிளம்பியது. இதையடுத்து சிவகணேஷ் அங்கு சென்று குடோனை திறந்து பார்த்தபோது அங்கிருந்த பார்சல்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகணேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியது. கட்டிடம் உடைந்து விழுந்தது. விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.