Salem AIADMK Leader murder: திமுக பிரமுகர் உட்பட 9 பேர் கைது!

Advertisements

சேலத்தில் அதிமுக நிர்வாகி நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சேலம்:சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவர் கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராகப் பதவி வகித்து வந்தார். நேற்று இரவு 10 மணியளவில் இவர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் எதிரே உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். தாதகாப்பட்டி மெயின் ரோட்டிலிருந்து மாரியம்மன் கோவில் வீதி வழியாகத் தனது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.

வீட்டுக்குச் சில அடி தூரத்தில் வந்தபோது அவரை நோட்டமிட்டபடி 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் கும்பலாக எதிரில் திடீரென வந்தனர். அவர்கள் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மோட்டார் சைக்கிள்களைக் குறுக்காக நிறுத்தினர். பின்னர் அந்தக் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சண்முகத்தை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை பகுதி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக இறந்தார்.

இதை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பார்த்துச் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதைபார்த்த கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். கொலை குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி சண்முகம் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் திமுக பிரமுகர் உட்பட 9 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பிரமுகர் சதிஷ் சேலம் மாநகராட்சியின் 55-வது வார்டு கவுன்சிலரின் கணவர் ஆவார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *