Lorry Accident: சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்து!

ஆத்தூர் அருகே தும்பல் பகுதியில் இருந்து ஆத்தூர் நோக்கி தேங்காய் பாரம் ஏற்றி வந்த ஈச்சர் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து. லாரியில் பின் பகுதியில் அமர்ந்து வந்த இரண்டு பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பழைய உடையம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பல்வேறு இடங்களில் தேங்காய் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஆத்தூர் அருகே தும்பல் பகுதியில் கொள்முதல் செய்த தேங்காய்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை பழைய உடையம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் ஒட்டி வந்தார்.

அப்போது ஈச்சர் லாரியின் பின்பகுதியில் இரண்டு பேர் அமர்ந்திருந்த நிலையில் அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர்லாரி, சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை கொத்தாம்பாடி பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதில் அதிவேகமாக வந்த ஈச்சர் லாரி அப்பகுதியில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈச்சர் லாரியின் பின்னால் அமர்ந்து வந்த பெண் உட்பட இரண்டு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அப்பகுதி மக்கள் உடனடியாக இரண்டு பேரையும் மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தினால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊரக காவல்துறையினர் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஈச்சர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர்.

அதிக தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஈச்சேர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *