திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பட்டி கொண்டாவில் தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது. விவசாயிகள் அப்பகுதியில் விளைவிக்கும் தக்காளிகளை சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் தக்காளியை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். தக்காளியை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாயென விலை நிர்ணயம் செய்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமான தக்காளி குறைந்த விலைக்கு ஏலம் விடுவதாகவும், வியாபாரிகள் உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டினர்.
பின்னர் தாங்கள் விற்பனைக்குக் கொண்டு வந்த தக்காளியை மூட்டை மூட்டையாகச் சந்தைக்கு வெளியே கொட்டினர். அங்கிருந்த சிறு வியாபாரிகள் போட்டி போட்டுத் தக்காளியை மூட்டைகளில் அள்ளிச்சென்றனர்.
தக்காளிக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனக் கூறி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த சில நாட்களாகத் தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது.
தற்போது சிறு வியாபாரிகள் தரம் இல்லாத தக்காளிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தரமான தக்காளிக்கும் அதே விலை நிர்ணயிக்க வேண்டி உள்ளதாகத் தெரிவித்தனர்.