Manmohan Singh: ஓய்வு பெற்றாலும் மன்மோகன் சிங் என்றுமே கதாநாயகன்தான்…. காங்கிரஸ் பாராட்டு!

Advertisements

புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியில் இருந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு மன்மோகன் சிங் ஓய்வு பெறுகிறார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவருக்கு எழுதிய கடிதத்தில், “ஓய்வு பெற்றாலும் என்றுமே நீங்கள் கதாநாயகன் தான்” என்று மன்மோகன் சிங்குக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 1991-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக முதலில் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 33 ஆண்டுகாலம்
மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் நீடித்த மன்மோகன் சிங் இன்று ஓய்வுபெறுகிறார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதி அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து மன்மோகன் சிங் ஓய்வுபெறுவதன் மூலம், ஒரு சகாப்தம் நிறைவு பெற்றுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும், நடுத்தர மக்களுக்கும், ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார்.

நீங்கள், தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றாலும்கூட, நாட்டுக்காகவும், நாட்டின் மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் நீடிப்பீர்கள், உங்களுக்கு அமைதியும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பெரிய தொழில்கள் இளம் தொழில் முனைவோர் சிறு தொழில்கள் சம்பளம் வாங்கும் வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு சமமாக பயனளிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவது சாத்தியம் என்பதை நீங்கள் சாதித்து காட்டி இருக்கிறீர்கள். ஏழைகளும் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு பெறலாம் என்பதையும் நிரூபித்து இருக்கிறீர்கள்.

தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும் என்றும் இருப்பீர்கள். உங்களை விட அதிக அர்ப்பணிப்புடனும் அதிக பக்தியுடனும் எங்கள் நாட்டிற்கு சேவை செய்ததாக மிகச் சிலரையே கூற முடியும்.

மேலும், இந்த நாடு குறிப்பாக, கிராம மக்கள், தங்களது வாழ்வுக்காகவும், வாழ்வாதாரங்களுக்காகவும் நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மூலம், மரியாதைக்குரிய வாழ்வை மேற்கொண்டதற்காக உங்களை எப்போதும் நினைவுகூர்வார்கள்.

பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் கொள்கைகளால் உலகிலேயே 27 கோடி ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்க முடிந்தது. தங்களுடைய யோசனைப்படி தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு நெருக்கடி காலங்களில் தொடர்ந்து நிவாரணம் அளிக்க முடிகிறது.

பிரதமர் அலுவலகத்துக்கு மன்மோகன் சிங் ஏற்படுத்திய அமைதியான, வலுவான கண்ணியத்தை தற்போது தேசம் எதிர்பார்க்கிறது. மன்மோகன் சிங் அரசால் தொடங்கப்பட்ட சீர்திருத்த திட்டங்களினால் கிடைத்த பயனுக்கு பெருமை கொண்டாடிய மோடி அரசு கண்டனத்திற்குரியது.

நாடாளுமன்றம் இனி உங்கள் ஞானத்தையும் அனுபவத்தையும் இழக்கும். உங்கள் கண்ணியமான அளவிடப்பட்ட மென்மையான ஆனால் அரசியல்வாதி போன்ற வார்த்தைகள் தற்போதைய அரசியலை குறிக்கும் பொய்களால் நிரப்பப்பட்ட உரத்த குரல்களுக்கு மாறாக அமைந்து இருந்தன.

பண மதிப்பு நீக்கம் குறித்து “இது நினைவுச் சின்னமாக அமையும் நிர்வாகத் தோல்வி”என்ற உங்கள் பேச்சு இன்னும் நினைவிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் பொய்களை இந்த நாடும் மக்களும் விரைவில் கண்டு கொள்வார்கள்.
எப்படி நிலவையும் சூரியனையும் மறைக்க முடியாதோ, அப்படித்தான் உண்மையையும் எப்போதும் மறைக்க முடியாது. நாட்டு மக்கள் விரைவில் உங்களின் வார்த்தைக்கான முக்கியத்துவத்தை அறிந்து கொள்வார்கள்”.

இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறி இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *