S. Jaishankar: நேருவுக்கு, இந்தியாவை விட சீனா தான் முக்கியம்… காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி!

Advertisements

இந்தியாவைவிட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு பேசிய காலம் உண்டு என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் முன்னாள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பாஜக அதிரடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை பார்த்து கொடுத்த விவகாரத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மறைந்த முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு இந்தியாவை விட சீனாவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார் என்ற பிரச்சினையை மீண்டும் அவர் எழுப்பியிருக்கிறார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய எஸ். ஜெய்சங்கர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1950-ல், (அப்போதைய உள்துறை அமைச்சர்) சர்தார் படேல், அப்போதைய பிரதமர் நேருவிடம் சீனாவைப் பற்றி எச்சரித்தார்.

“இதற்கு முன் இல்லாத வகையில் இன்று நாம் பாகிஸ்தான், சீனா என இருமுனைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். சீனர்களின் நோக்கங்கள் வித்தியாசமாகத் தோன்றுவதால் அவர்கள் சொல்வதை நான் நம்பவில்லை; நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”என்று படேல் நேருவிடம் கூறினார்.

ஆனால், நேரு, “நீங்கள் சீனர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுகிறீர்கள்” என்று படேலுக்கு பதிலளித்தார். மேலும், “இமயமலையைத் தாண்டி யாரும் இந்தியாவை தாக்குவது சாத்தியமில்லை” என்றும் அவர் கூறினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பற்றிய விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்பட வேண்டுமா? என்பதுதான் அந்த விவாதம்.

அப்போது நேரு, ‘ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக நாம் (இந்தியா) தகுதியானவர்கள். ஆனால் முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

இன்று நாம் இந்தியா முதலில் என்பது பற்றி பேசுகிறோம். ஆனால், சீனாதான் முதல் என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு.

முன்னாள் பிரதமர் நேருவின் கடந்த கால தவறுகளால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (பிஓகே) மற்றும் இந்தியப் பகுதியின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.

இருப்பினும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், காலம் காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது.

இன்று நாம் நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, ​​சிலர் நமது எல்லைகளை பழையபடி மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நமது எல்லைகள்தான்.

அதை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. காஷ்மீர் விஷயத்தில் நம்மிடம் ஒரு நாடாளுமன்ற தீர்மானம் (பிஓகே தொடர்பாக) உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு கொண்டு செல்லும் முடிவு பற்றியும் ஜெய்சங்கர் விமர்சித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்பதற்கான ராணுவ நடவடிக்கைக்கு எதிரான அழுத்தத்திற்கு ஐநாவின் ஈடுபாடு பற்றி அப்போது அவர் குறிப்பிட்டார்.

நீதிபதி பாரபட்சமானவர் என்று தெரிந்தால் அவரிடம் நியாயம் கேட்கப் போகிறீர்களா? ஆனால் அதுதான் நடந்தது ஐநாவுக்கு பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டு உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதற்கான நடவடிக்கை நிறுத்தும்படி நிறைய அழுத்தம் வந்தது. கடந்த கால தவறுகளால் தான் இன்று நாம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக ராஜ்கோட்டில் பேசிய ஜெய்சங்கர், “ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கான வாய்ப்பு சாதகமாக உள்ளது. விரும்பத்தக்க பதவியைப் பெற விடாமுயற்சியுடன் பணியாற்றுவது அவசியம்” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *