
செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்தார் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுத்தால் எடப்பாடி பழனிசாமிக்குதான் தர வேண்டும் என்றும் செங்கோட்டையன் சாடியுள்ளார்.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இல்லாத காரணத்தை சொல்லி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கமால் புறக்கணித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதற்கான காரணத்தையும் சொல்லியும் அவர் அதனை ஏற்கவில்லை. ஆனால் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இல்லாமல் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்கள் இருந்தன.
அப்போதே அவர் திமுகவின் பி டீமாக செயல்பட தொடங்கிவிட்டார்.செங்கோட்டையன் கடந்த 6 மாதமாக கட்சிக்கு எதிராக தான் செயல்பட்டு வந்தார். செங்கோட்டையன் குறிப்பிடுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சிக்கு துரோகம் செய்தால் இதுதான் நிலைமை. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால், நீக்காமல் என்ன செய்வார்கள் ? என்று கேள்வி எழுப்பினார்



