
திமுக அரசு தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டது என்று பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள மலையாண்டிபட்டணம்,நாட்டுக்கல் பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால கல்வெட்டுக்கள்,நடுக்கல்,முதியோர் தாழி போன்ற அரிய பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இவைகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் சிதறி கிடப்பதால், பராமரித்திட வலியுறுத்தியும், பொள்ளாச்சியை மையமாகக் கொண்டு தமிழ்த்தாய் ஆய்வுக்கூடம் அமைக்க வலியுறுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பிரிவு சார்பில் மாநில தலைவர் அன்பழகன் தலைமையில்,பாஜகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, திராவிட மாடல் அரசு உண்மையான தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டது என்றார்.
மேலும், இலக்கியங்களான தேவாரம்,திருவாசகம், திவ்ய பிரபந்தங்கள், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களையும் அழித்துவிட்டு இன்றைக்கு திராவிட மாடல் அரசு இந்த தமிழை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்கல்பாளையம், ஆனைமலை, மலையாண்டிபட்டினம் போன்ற பகுதிகளில் தமிழ் மொழியின் உடையபண்டைய சரித்திரம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.இவைகள் அழிந்து வருவதால்,அனைத்தும் பராமரிக்க வேண்டும்.இந்த பகுதி மிகப்பெரிய வரலாற்று புகழ் பெற்ற பகுதி. பொள்ளாச்சி என்று சொன்னால் பொருளாட்சியாக விளங்கக்கூடியது.
கொங்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய வரலாற்று பெட்டகங்களை எடுத்து பாதுகாக்கும் வகையில் கீழடி,ஆதிச்சநல்லூரை போன்று இதனையும் கைவிடாமல் வழி நடத்தி பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதில் இலக்கிய அணியின் மாவட்ட தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



