
மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்த அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ளப் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்குத் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறிச் செயல்படும் கர்நாடக அரசின் செயல்பாடுகளைத் தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறதா? மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும். கர்நாடகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் தமிழ்நாட்டுக்கு துரோகங்கள் செய்தது. மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும். ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



