
அசாமில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
புதுச்சேரியில் 30 தொகுதிகள், கேரளத்தில் 140 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் நாள் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப்ரல் 23ஆம் நாளும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் இன்றும் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே நான்காம் நாள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
வாக்களித்து வெளியே வந்த பொதுமக்களிடம் தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்காணலின் அடிப்படையில் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி 62 முதல் 69 இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 71 முதல் 79 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பாஜக ஒன்று முதல் நான்கு தொகுதிகளிலும், பிறர் மூன்று இடங்கள் வரையும் பிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பி மார்க் கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் 118 முதல் 138 தொகுதிகள் வரை வெற்றிபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது. பாஜக 150 முதல் 175 தொகுதிகள் வரை கைப்பற்றி அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 82 முதல் 94 தொகுதிகள் வரை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 30 முதல் 40 தொகுதிகள் வரை பெறும் எனத் தெரிவித்துள்ளது.



