Advertisements

தவெக தலைவர் விஜய் விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளதாகத் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று, ஆங்கிலத்தில் உரையாற்றி சட்டசபை கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர், தவெக பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளதாகப் புகழாரம் சூட்டினார். மேலும், பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளதாகக் கூறினார். இதன்பின்னர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார். அவர் வாசித்து முடித்ததும் இன்றைய சட்டசபை கூட்டம் முடிவடைந்தது.
தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில், ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகின்ற 22 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கும் என்றும் 23 ஆம் தேதி பதில் உரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாளை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மூத்த தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும் என்று கூறினார்.
Advertisements




