
பொள்ளாச்சி அருகே வால்பாறையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதி 800 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 4பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் மலைப்புறத்தைச் சேர்ந்த 16 பேர் வேனில் வால்பாறைக்குச் சுற்றுலா வந்துள்ளனர். வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு நேற்று மாலை பொள்ளாச்சி வழியாகக் கேரளத்துக்குச் செல்ல வேனில் வந்து கொண்டிருந்தபோது வால்பாறை மலைப்பாதையில் உள்ள 13ஆவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 11ஆவது கொண்டை ஊசி வளைவில் விழுந்து நொறுங்கியது..
இந்த விபத்தில் வேனில் இருந்த 16 பேரில் 7 பெண்கள் உட்பட ஒன்பது பேர் பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயத்துடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுற்றுலா வேனில் வந்தவர்கள் கேரள மாநிலம் பெருந்தலைமன்னா தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிர்வாகிகள் எனத் தெரியவந்துள்ளது.
விபத்துக் குறித்த செய்தியை அறிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், வால்பாறையில் நேர்ந்த பயங்கர விபத்தில் உயிரிழப்பு நேர்ந்தது ஆழ்ந்த வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்னருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தோர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டிக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த விபத்தை அறிந்து மிகுந்த வேதனையடைந்தாகவும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.



