Edappadi K. Palaniswami: கண்டனம்!

Advertisements

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி போனஸ் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2022-2023ம் ஆண்டிற்கான அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக (Ex Gratia) 20 சதவீதம் வழங்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்தினோம்.

Advertisements

இதனை ஏற்று விடியா திமுக அரசும் இந்த ஆண்டு தமிழ் நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று 7.11.2023 அன்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது.

‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்று இந்தியாவிலேயே தமிழ் நாடு கூட்டுறவுத் துறை சிறப்பான இடத்தை வகிப்பதோடு, இந்திய அளவில் பல முதல் பரிசுகளைப் பெற்றுள்ளது மற்றும் லாபத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசின் வேளாண் நலத் திட்டங்கள் அனைத்தும் கூட்டுறவுத் துறை மூலமே தமிழக விவசாயிகளைச் சென்றடைகிறது.

மேலும், கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அந்தந்த வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்துதான் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நிதியில் இருந்து போனஸ் வழங்கப்படுவதில்லை.

கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெய்யுமாக இந்த விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும், 1.1.2021 முதல் ஏற்படுத்தப்பட வேண்டிய அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த 34 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இந்த விடியா திமுக அரசு காலதாமதம் செய்து வருவது கூட்டுறவுத் துறை ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்த நாள்முதல் கூட்டுக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த விடியா திமுக ஆட்சியாளர்கள், வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் வயிற்றில்

அடிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். எனவே, உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியது போல், 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *