
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்க ஏழரை முதல் பத்து விழுக்காடு என்கிற அளவில் அமைச்சர் நேரு 1020 கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
திமுக அரசில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் அமைச்சரான நேரு அவரின் கீழுள்ள துறைகளில் பல்வேறு பணிகளுக்கு 25 இலட்சம் முதல் 35 இலட்சம் ரூபாய் வரை கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்ததாகவும், அதில் மொத்தம் 900 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகவும் ஏற்கெனவே அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தக்க சான்றுகளுடன் பலநூறு பக்க அறிக்கையை மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அனுப்பியிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் நேரு மீது குற்றஞ்சாட்டி மீண்டும் 252 பக்க அறிக்கையை மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. அதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளில் ஒப்பந்தப் பணி செய்வோரிடம், பணிகளின் மதிப்பில் ஏழரை விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை கையூட்டாகத் தனது உறவினர்களின் வழியே நேரு பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. மொத்தம் 1020 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளதுடன், அதற்கான சான்றுகளாக வாட்ஸ் ஆப் உரையாடல்கள், கையூட்டுக் கணக்கிட்ட தாள்கள், பணம் பரிமாறியதற்கான தாள்கள் ஆகியவற்றை இணைத்துள்ளது.
இது குறித்து நாளிதழில் வந்துள்ள செய்தியை மேற்கோள் காட்டியுள்ள அண்ணாமலை, பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்தது, பணம் வாங்கிக்கொண்டு ஒப்பந்தப் பணிகள் வழங்கியது ஆகியன குறித்து நேரு மீது உடனடியாக வழக்குப் பதிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




