தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல்..!

தாய்லாந்து – கம்போடிய நாடுகளின் எல்லையில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லைத் தகராறு இருந்து வந்தது. ஜூலை மாதம் இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால் அமைதி நிலவி வந்தது.இந்நிலையில் தாய்லாந்தின் வடகிழக்கே சி சா  கட், உபோன் ரட்சதானி மாகாணங்கள், கம்போடியாவின் வடக்கு எல்லை மாகாணங்களான பிரியா விகேர், ஒட்டார் மியாஞ்சே ஆகியவற்றில் உள்ள எல்லைப் பகுதிகளில் இருநாட்டுப் படையினருக்கும் இடையே மீண்டும் மோதல் மூண்டது.

இந்த மோதலில் கம்போடிய வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தாய்லாந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் கம்போடியாவில் பொதுமக்கள் மூவர் காயமடைந்தனர். இதையடுத்துத் தாய்லாந்து போர் விமானங்கள் கம்போடிய இராணுவ நிலைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.இதனால் மோதல் மூண்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.முன்னதாகப் போர் நிறுத்தத்துக்குக் காரணமான மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *