புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள சார்லஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது சகோதரர்கள் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், வெட்டன் விடுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.
இவர்கள் 3 பேரும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் சோலார் தெரு விளக்குகள் அமைக்கும் ஒப்பந்தம் மற்றும் பல்வேறு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்துச் செய்து வந்தனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்பட்டது.
3 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர் 2022 ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்களது வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி முருகானந்தம் மற்றும் பழனிவேல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் நடந்தது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்து பெற்றது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 20 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 குழுவாகப் பிரிந்து சென்று முருகானந்தம், பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பாதுகாப்புக்காகத் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் முருகானந்தம் பா.ஜ.க. புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக உள்ளார். பழனிவேல் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தற்போது கரம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.