
சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஞாயிறு இன்று உலகம் முழுவதும் கிறித்தவர்களால் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு தேவாலாயங்களில் இதையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. அதைச் சிறிய தொகுப்பாகக் காணலாம்.
இயேசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுந்தார் என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு தேவாலயங்களில் பிரார்த்தனை செய்தனர்.
நாகர்கோவிலில் கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தில் நள்ளிரவு 12 மணியளவில் இயேசு உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி நடந்தது. மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது அங்குக் கூடியிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு வாழ்த்துப் பாடினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நள்ளிரவு உயிர்த்த ஞாயிறு கொண்டாடப்பட்டது. பங்குத் தந்தை ஆனந்தராஜ் தலைமையில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மூன்று நாட்கள் ஒலிக்காமல் இருந்த ஆலய மணி நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்தது.
ஒலிக்க சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3ஆம் நாள் உயிர்த்தெழுவது போல் ஆலய வளாகத்தில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த கத்தோலிக்க கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் நள்ளிரவு இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை பால்ராஜ் குமார், உதவிப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உயிர்த்தெழும் நிகழ்வின் போது மெழுகுத்திரி விளக்கேற்றிப் பாடல்களைப் பாடினர்.



