அமைச்சர் ராஜ்மோகனை குறிவைக்கும் விமர்சனங்கள்..! பின்னணி என்ன..?

Advertisements
தற்போது பொறுப்பேற்றிருக்கும் த.வெக அரசில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக உள்ள ராஜ்மோகன் கல்வித் தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றும்,  பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழியாக  குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.

த.வெ.க தலைவர் என்கிற முறையில் மே 10 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.அதன்பிறகு, சுமார் ஒருவார காலம் துறைகள் அறிவிக்கப்படாமல் 9 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்றனர். இந்நிலையில், மே 16 ம் தேதி  அந்த  9 அமைச்சர்களுக்கான துறைகள் அறிவிக்கப்பட்டன.முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனிடையே, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில், பள்ளிக் கல்வித்துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் தொடர்பான சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தனது கல்வித்தகுதி குறித்து திரிக்கப்பட்ட வெளியிட்டிருந்த தகவல் வெகு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இதுகுறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளராக உள்ள சரவணன் அண்ணாதுரை என்பவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. இது தமிழ்நாட்டிற்கு புதிது என்று பதிவிட்டுள்ளார்.

அதை மட்டும் அவர் சொல்லாமல், நடிகர் விஜய்யின் அரசை பார்க்கும் போது அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். ஏனென்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக்குள்ளானது. அதேபோல் பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் பல முறை கேள்வி எழுப்பி சந்தேகம் கிளப்பியது அனைவருக்கும் தெரிந்த விவகாரம்தான்.

தற்போது தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக உள்ள ராஜ்மோகன், IIMAT – என்ற நிறுவனத்தில் படித்ததாக  சொல்கிறார்.   மேலும் அந்த நிறுவனத்தின் இமேஜையும்  அமைச்சர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மீதே அவரது படிப்புத் தொடர்பான சந்தேகம் எழும்பியிருப்பதாக சொல்கின்றனர்.

இதேபோல்,  அமைச்சர் ராஜ்மோகன் குறித்து மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது. அவருக்கு பள்ளிக்கல்வித் துறை தவிர்த்து தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை, தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளரான நடிகர் விஷால், சினிமா துறைக்கு அந்தத் துறையே சாராத ஒருவரை நியமித்திருப்பதாக அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்பட சட்டத்துறை அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றிருப்பது சற்றே மனவருத்தத்தை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். தற்போது கடுமையான நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நமது சினிமா திரையுலகின் கோரிக்கைகளையும், குறைகளையும் ஒரு சங்கமாகவோ அல்லது அமைப்பாகவோ நாம் அவரிடம் எப்படி எடுத்துச் சொல்வது? என்றும்  குறிப்பிட்டிருக்கும் விஷால், திரையுலகின் கோரிக்கைகளையும் குறைகளையும், இந்தத் துறையில் என்ன நடக்கிறது என்பது குறித்துக் குறைந்த அனுபவமே உள்ள அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம் அதாவது அமைச்சர் ராஜ்மோகனிடம், திரையுலகினர் ஒரு சங்கமாக எப்படிக் கோரிக்கைகளை முன்வைப்பது?  என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

30 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் நம் முதலமைச்சரை விடத் திரையுலகை யார் அதிகமாக அறிவார்கள்? அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது? என்றும் விஷால் வினவியுள்ளார். அமைச்சர் பதவியேற்ற இரண்டே  நாளில் அடுத்தடுத்து ராஜ்மோகன் மீது புகார்கள் எழுந்து வருவது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *