
கடந்த மார்ச் 29ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான விசிக வேட்பாளர்களை அறிவித்தார். அதில் , யாரும் எதிர்பாராத வகையில் காட்டுமன்னார்கோயில் தொகுதிக்கு தானே போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். திருமாவின் அறிவிப்பால், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும். அதனால் நான் மாநில அரசியலில் கவனம் செலுத்துகிறேன் என திருமாவளவன் அதற்கு காரணமும் தெரிவித்து இருந்தார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் திமுகவின் சில முக்கிய அமைச்சர்கள் திருமாவை தொடர்பு கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். தேர்தல் பரப்புரைக்கு முன்பாக அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் வரவழைத்து ஒரு டீ பார்ட்டி கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த நிகழ்வில் திமுகவின் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டார்கள். கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு விஷயத்தில் வருத்தத்தில் இருப்பதாக வெளிப்படையாகவே அறிவித்த நிலையில் இந்த டீ பார்ட்டியை வைத்து ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்குவதற்காக முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.
டீ பார்ட்டி முடிந்து முதலமைச்சர் புறப்பட்டவுடன் கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் அறிவாலயத்தில் ஓர் அறையில் அமைச்சர் வேலு, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இங்கு, திருமாவளவனிடம் மட்டும் எ.வ.வேலு, எம் ஆர் கே ஆகிய அமைச்சர்கள் ரகசியமாக ஒரு மணி நேரம் பேச வேண்டும் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக சிதம்பரம் எம்பி யாக தற்போது இருக்கிற திருமாவளவன் அறிவித்ததுதான் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த காரணமாக இருந்தது.
இந்த சந்திப்பின்போது, ‘முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் அது பற்றி நீங்கள் கூறிய விளக்கம் குறித்தும் சற்று கவலையில் இருக்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் எம்பி ஆக இருக்கும்போது ஏன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்? அது குறித்து நீங்கள் சொன்ன கருத்துக்கள் கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
எனவே நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று முதலமைச்சரின் கோரிக்கையை இரண்டு அமைச்சர்களும் திருமாவிடம் கூறியுள்ளனர். அதற்கு திருமாவளவன், ‘நான் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மாநில கட்சியாக இருக்கிறது.
நான் எம்பி யாக இருப்பதால் தமிழ்நாட்டில் கட்சி வளர்ச்சி குறித்து என்னால் தீவிரமாக பணியாற்ற முடியவில்லை. எனவே இது எங்களுக்கு கட்சி சார்ந்த முடிவு. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பதெல்லாம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று தன்னுடைய விளக்கத்தை தெரிவித்துள்ளார். எனினும், திருமாவிடம் தொடர்ந்து இந்த இரண்டு அமைச்சர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் முதல்வர் ஸ்டாலினிடத்தில் ‘திருமாவளவன் மனதை 50% கரைத்து விட்டோம். இன்னும் ஒரு 50 சதவீதம் இருக்கிறது. அவரது சட்டமன்ற தேர்தலில் நிற்கும் முடிவை நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வைப்போம்’ என்ன நம்பிக்கையாக கூறியுள்ளனர்” அதன்படியே அமைச்சர் வேலு, எம் ஆர் கே ஆகியோர் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையில் திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட இருந்த முடிவிலிருந்து தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
மேலும் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தன்னுடைய சொந்த கிராமமான அங்கனூரை சேர்ந்த ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்துள்ளார். திருமாவளவன். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வாக்களிப்பது வழக்கம். அங்குதான் அவரது தந்தை தொல்காப்பியன், தாயார் பெரியம்மா, தம்பிமார்கள் செங்குட்டுவன், வள்ளுவன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இது குறித்து திருமாவளவள் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், ” சட்டசபைக்கு செல்ல விரும்பி, இதற்கு முன், மங்களூர் தொகுதியில் வென்றேன். இரண்டரை ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்தேன். பின் அ.தி.மு.க., கூட்டணியில், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட விரும்பினேன். ஆனால், அப்போது, என்னுடன் இருந்த தற்போதைய தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகைக்கு விட்டு கொடுத்தேன்.
2016 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றேன். பின், எம்.பி.,யானாலும், அவ்வப்போது சட்டசபைக்கு செல்ல ஆசை இருந்தது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் கைகள் ஓங்கி வருகின்றன. தி.மு.க., கூட்டணியை வீழ்த்த, வலதுசாரி கட்சிகள், என்னை கூட்டணியில் இருந்து விலக்க முயற்சித்தனர். தி.மு.க., கூட்டணி, தொடர்ந்து கட்டுக்கோப்பாக இருப்பதற்கு, நானே முக்கிய காரணம்.
இந்நிலையில், தேர்தலுக்கு பின் தொங்கு சட்டசபை உருவாகும் என்பதால், கூட்டணி ஆட்சி அமையும்; எம்.பி., பதவியை விட்டு, சட்டசபைக்கு வரும் திருமாவளவன், துணைமுதல்வராக திட்டமிடுகிறார் என, அவதுாறுகளை பரப்புகின்றனர். மேலும், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருந்ததால் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவதுாறு பரப்புகின்றனர்.
யுத்த களத்தில் முன்னோக்கி போவது ராஜதந்திரம் என்றால், ஒரு அடி பின்னால் போவதும் ராஜதந்திரம் தான். எனது நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். யுக்தியை மாற்றி அமைக்கிறேன். காட்டுமன்னார்கோவிலில், ஜாதி ஒழிப்புக்கு போராடிய, இளையபெருமாளின் மகன் ஜோதிமணி, வி.சி.க., வேட்பாளராக அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்குள் சுற்றி வந்த புயல் ஓய்ந்து விட்டதல், இப்போதைக்கு உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





