அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து ஏமாற்றாதீர்கள் – தினகரன்!

Advertisements

சென்னை: 

அடிப்படை வசதிகளின்றி அவலநிலையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளால் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தியதின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் Annual Status Of Education Report எனும் ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்தும் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

30 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவியர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைவிடத் தமிழகத்தின் கல்வித்தரம் அதளபாதாளத்திற்கு சென்றிருப்பது உறுதியாகிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விகிதத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டு கணிசமாகக் குறைந்திருப்பதோடு, பல பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர், வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அரசுப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் வகுப்பறைகளைச் சீரமைப்பதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களில் 64 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகுப்புப் பாடங்களைக் கூடப் பயில முடியாத அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

எனவே, இனியும் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பி மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *