
புனே:
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தி இருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் இந்திய மண்ணில் தொடர்ந்து 17 டி20 தொடர்களை இந்திய அணி வென்று இருக்கிறது.
2019 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இது மட்டுமின்றி சூர்யகுமார் யாதவ் கேப்டனாகச் செயல்பட்ட ஆறு டி20 தொடர்களில் இந்திய அணி ஒரு முறை கூடத் தொடரை இழக்கவில்லை.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆடிய இந்திய அணி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 எனக் கைப்பற்றியது.
அடுத்து 2023 இல் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1 – 1 எனச் சமனில் முடிந்தது. அடுத்து 2024 ஆம் ஆண்டில் இலங்ககை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்டு தொடரை 3 – 0 எனவும், வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 3 – 0 எனவும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.
அடுத்து 2024 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 3 – 1 என இந்திய அணி வென்றது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4 போட்டிகள் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் 3 – 1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் ஒரு டி20 தொடரைக் கூட இழக்காத இந்திய அணி கேப்டன் என்ற பெருமையைப் பெற்று இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். மேலும், இந்திய அணியின் டி20 கேப்டன்களிலேயே அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட கேப்டனாகவும் முத்திரை பதித்திருக்கிறார்.
இதுவரை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 62 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 50 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருக்கிறார். ரோஹித்தின் வெற்றி சதவீதம் 80.64 என்பதாகும்.
அடுத்த இடத்தில் இருக்கும் விராட் கோலி 50 டி20 போட்டிகளில் 32 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அவரது வெற்றி சதவீதம் 64 ஆகும். தோனி கேப்டனாக இருந்தபோது 72 டி20 போட்டிகளில் 42 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அவரது வெற்றி சதவீதம் 58.33 என்பதாகும்.
சூர்யகுமார் யாதவ் 21 போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்து 17 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அவரது வெற்றி சதவீதம் 80.95 என்பதாகும்.
மற்ற மூவரை விட அதிக வெற்றி சதவீதத்தை வைத்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் வெற்றிகரமான டி20 கேப்டன் என முத்திரை பதித்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
