மீண்டும் மீண்டும் கேட்காதீங்க – இ.பி.எஸ்!

Advertisements

கிருஷ்ணகிரி: 

‘நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்ற கட்சிகளுக்குத் தான். பா.ஜ., வுக்கு அல்ல” என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வோடு கூட்டணி இல்லை என்பதை பல இடங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டாம். எங்களுக்கு மக்கள் விரோத தி.மு.க., அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ., வுடன் அ.தி.மு.க., கூட்டணி இல்லை. நான் கூட்டணிக்கு வருமாறு வேண்டுகோள் விடுப்பது மற்றக் கட்சிகளுக்குத் தான். ஏற்கனவே லோக்சபா தேர்தலில் தெளிவுபடுத்தி விட்டோம். வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனைத் தவிர்த்துத் தான் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

தேர்தல் முடிந்த பிறகு தான், யார் யாருக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர் என்பது தெரியவரும். இது மறைமுக ஓட்டு தான். நேரடி ஓட்டு கிடையாது. அ.தி.மு.க., வைப்பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் செல்வாக்கு உடைய ஒரே கட்சி அ.தி.மு.க., இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் விளங்குவதற்கு அ.தி.மு.க., ஆட்சி தான் காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., அரசை மக்கள் எப்படி புறக்கணிப்பார்கள். யார் சேவை செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு நிறைந்த கட்சி என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளோம். ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைக்கும். அ.தி.மு.க., மெகா கூட்டணியில் பா.ஜ., இருக்காது. மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முதல்வர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார். மக்களுக்குத் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திட்டங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்து கேட்ட கேள்விக்கு, அ.தி.மு.க., பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அது எப்போதும் நெருக்கடியைச் சந்திக்காது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலைவிடத் தற்போது லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுக்களை அ.தி.மு.க., பெற்றுள்ளது. விஜய் கட்சி துவங்கி உள்ளதால் அ.தி.மு.க., வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதேபோலத் தி.மு.க., அதன் ஓட்டு சதவீதத்தை இழந்துள்ளது. இதுதான் உண்மை’ என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *