மதுரை:
சீமானின் கருத்தை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால், அவர் பேசுகிற அரசியல் எத்தகையது என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை ஆதரிப்பார், அண்ணாமலை சார்ந்த சங்பரிவார்கள் ஆதரவளிப்பார்கள்.
இதனால் சீமான் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பெரியார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துகள் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசுகையில், “பெரியார்குறித்த சீமானின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது.
அவரது பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாகவும், குதர்க்கமாகவும் உள்ளது. பெரியார் தொடர்பான அவரின் பேச்சு சீமான் பேசுகின்ற அரசியலுக்கே எதிரானதாகப் போய் முடியும்.
இந்திய அளவில் பாரதிய ஜனதா மற்றும் சங்பரிவார்கள் பேசக்கூடிய மதவெறி தேசியம் தான், மொழி வழி தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும்.
தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியும் அதுதான். அதனைவிடுத்து, தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், தமிழர்களுக்காகவும் இறுதி மூச்சு வரையில் தீவிர களப்பணியாற்றிய பெரியாரைக் கொச்சப்படுத்துவது ஏற்புடையதல்ல.
தமிழ் மீதும், தமிழ் மக்கள்மீதும் உள்ள அக்கறையில் சில விமர்சனங்களைப் பெரியார் வைத்துள்ளார். காட்டுமிராண்டி காலத்திலிருந்து தமிழ் பேசப்படுகிறது என்ற தொன்மையை பேசுவதற்காகப் பெரியார் அப்படி குறிப்பிட்டுள்ளார்.
பெரியார்குறித்து பேசும் இது போன்ற போக்கைச் சீமான் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சீமானின் கருத்தை அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால், அவர் பேசுகிற அரசியல் எத்தகையது என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணாமலை ஆதரிப்பார், அண்ணாமலை சார்ந்த சங்பரிவார்கள் ஆதரவளிப்பார்கள். இதனால் சீமான் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.