ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்குக் கடும் பொருளாதார நடவடிக்கை – டிரம்ப்.!

ஈரானுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தன்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாரும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் துரதிர்ஷ்டவசமாக,  அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எந்தவொரு நாட்டின் மீதும் இதுவரை மேற்கொள்ளப்படாததிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை நான் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போர் மற்றும் தனிமைப்படுத்தலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டதாகவும், விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டதாகவும், ராணுவத் தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நாடு மிக மோசமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டிற்குத் தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் எந்த வகையிலாவது உதவிகளை வழங்கும் எந்தவொரு நாடும், கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்காவுடன் எங்கள் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதுடன், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்பும் அவர்களின் திறனையும் அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *