
வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்தில் ஒரு நபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் டிரம்ப் மீதான குற்ற வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஒரு நபர் நீதிமன்ற வளாகத்தில் துண்டுப் பிரசுரங்களை வீசினார்.
பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர். அந்த நபர் உடல் தீயில் கருகி இருந்தது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ”தீக்குளித்தவர் புளோரிடாவை சேர்ந்த மேக்ஸ் அஸ்ரெல்லா (வயது 37) என்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் கடந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள தனது வீட்டிலிருந்து நியூயார்க் வந்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள அவரது குடும்பத்தினர் அவர் நியூயார்க் நகரத்திற்கு வந்தது தெரியவில்லையெனக் கூறுகின்றனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்து வருகிறோம். மேக்ஸ் அஸ்ரெல்லா தீக்குளித்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.



