மதுரை: ” பத்திரப்பதிவு துறையில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட வேண்டும்” எனத் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதியம் திட்டம்குறித்து தேவை இல்லாமல் திமுக அரசுத் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜன.,8ம் தேதி நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு போக்குவரத்து துறையை நிர்மூலமாக்கியுள்ளது.
அலங்காநல்லூருக்கு சம்மந்தம் இல்லாத பஞ்சாயத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு உள்ளது. எந்தக் குழந்தை பிறந்தாலும் கருணாநிதி என்று பெயர் வைப்போம். அண்ணாத்துரை என்று பெயர் வைப்போம் எனச் சட்டம் போட்டாலும் போடுவார்கள்.ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, கருணாநிதி பெயரை வைப்பதை கைவிட வேண்டும்.
அமைச்சர் மூர்த்தி வந்தபிறகு பத்திரப்பதிவு துறையில் இமாலய அளவில் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவு துறையில் ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை ஒழித்துக்கட்ட வேண்டும். பத்திரப்பதிவுத்துறை பணம் சம்பாதிக்கும் துறையாக மாறியுள்ளது. ஒவ்வொரு பத்திரப்பதிவு துறை அலுவலகத்திலும் மாலை 5மணிக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் கட்டு கட்டாகப் பணம் கிடைக்கும்.
இந்தப் போக்கு மாறாவிட்டால் பா.ஜ., போராட்டம் நடத்தும். திருப்பரங்குன்றத்தில் கடவுள் பெயரில் ஒரு புரோக்கர் இருக்கிறார். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் வீட்டில் சோதனை நடத்தினால் கிடைக்கும் பணத்தில் தமிழகத்தில் உள்ள பாதியளவு கடனை அடைத்து விடலாம்.
2024ம் ஆண்டுத் தேர்தல் மோடி என்கிற மனிதருக்கான தேர்தல். பிரதமர் வேட்பாளராக மற்றவர்களின் பெயரைக் கேட்டாலே சிரிக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ., வலுவாக இருக்கிறது. மோடியை பிரதமராக்க ஏற்பவர்களோடு பா.ஜ., கூட்டணி அமைக்கும். கூட்டணிகுறித்து தேர்தல் நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

