
கவுஹாத்தி:
‛இந்தியாவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது’’ என்று பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி. இவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தைச் சோனியா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ‛‛நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்’’ என்றார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டிலிருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராகப் போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாகக் கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ராகுலின் இந்தப் பேச்சைக் கண்டித்து அசாமின் மோன்ஜித் சேத்தியா என்பவர், அங்குள்ள பான் பஜார் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரைப் பெற்று கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191 (1) (தேச ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுதல்) என்று 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ராகுல் காந்திக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
