தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்று இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஏராளமான மக்கள் அச்சத்தில் பெட்ரோல் நிலையங்களில் காத்து நின்று வாங்கிச் சென்றதால், பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவிற்குக் கையிருப்பு இருப்பதாகவும், பெட்ரோல் நிலையங்களுக்கு விநியோகம் வழக்கம்போல சீராக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது. இதையடுத்து, சில இடங்களில் அச்சத்தில் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டதால், சில பெட்ரோல் நிலையங்களில் தற்காலிகமாக விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை குறை எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சத்தில் எரிபொருளை அதிகமாக வாங்குதல் அல்லது தேவையற்ற முறையில் சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.




