
காசாமுனையில் இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து காசாமுனை மீது இஸ்ரேல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்:
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு எதிரான போரில் காசா முனை மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இறுதியில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்தக்கோரி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிப்பு…!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையில் இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. தொடர் வான்வழி தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், காசாவில் உள்ள மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் பெரும் பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.
22வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது.



