
எப்போதுமே தமிழகத்தை பொறுத்த வரை, திமுகவினருக்கு காங்கிரஸ் தங்கள் மீது ஏறி சவாரி செய்து வருவதாக எண்ணம் உண்டு. ஏனென்றால் , தமிழகத்தில் தனித்து நின்றால், அந்த கட்சிக்கு இப்போதைய நிலையில், ஒரு எம்.எல்.ஏ சீட் கூட கிடைக்காது என்பது திமுகவினர் எண்ணணம். புகைச்சல் , அரசல் புரசலா இருந்தாலும், வரும் தேர்தலில் விஜய் கொளுத்திப் போட்ட ஒரு விஷயம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூடுதல் தெம்பை அளித்து விட்டது.
அதாவது, தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுப்போம் என்று விஜய் கூறியிருப்பதால் , காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் தெம்புடன் திமுவை சீண்டி பார்க்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதோடு, ராகுல் காந்தி விஜய்யுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தகவல் உள்ளது.
இதை , காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சியினருக்கு கூடுதல் சீட்டுகளை பெற திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 25 சீட்டுகள் வழங்கப்பட்டது. அதில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், வரும் தேர்தலில் கிட்டத்தட்ட 30 சீட்டுகள் வரை, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனை , முதல்வர் ஸ்டாலினிடன் மருமகன் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு உறுதி செய்ததாகவும் கூறுகிறார்கள் . ஆனால்,அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, திமுகவை பெரும்பான்மையாக வெற்றி பெற்று அரியணையில் மீண்டும் ஏற விடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கருதுவதாக தெரிகிறது.
அப்போதுதான், ஆட்சியில் பங்கு கேட்க முடியுமென்பது அந்த கட்சியின் எண்ணம். மேலும், தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி நேரடி சந்திப்பு நடந்த பின், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் காணப்படுவதாக திமுகவினர் சந்தேகிக்கின்றனர். இதன் விளைவாகவே, காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர், தொடர்ச்சியாக ஆட்சி, அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசி வந்தார்.
இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. அதே வேளையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்று விளக்கமளித்திருந்தார்.
விஜய் கட்சி இருப்பதால்தான் திமுகவுக்கு பிடிகொடுக்காமல் காங்கிரஸ் கட்சி , போக்கு காட்டுவதாக திமுவினர் கருதுகின்றனர். இதன் எதிரொலியாக , மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், திமுக மாநகர செயலாளர் மற்றும் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கோ.தளபதி கடுமையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார். ”மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும்,இதில் பங்கு வேண்டும் என்று பேசுகிறார்கள்.
எம்பியாகி விட்ட பிறகு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது . சட்டமன்ற தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இதையெல்லாம், காங்கிரஸ் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை சீட் கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் காங்கிரசுக்கு இருக்கிறது. வார்டுகளில் ‘பூத்’ கமிட்டி போட கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்” என கடுமையாக பேசியிருந்தார்.
மேலும் , காங்கிரசில் சிலர் திமுகவின் முயற்சிகளையும் உழைப்பையும் மதிக்காமல் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர்.தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கோ. தளபதி இப்படி பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆளே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்றுகிறார்கள் என்பது போல கோ. தளபதியின் இந்த கடுமையான பேச்சு காங்கிரஸ் கட்சிக்காரர்களின் சுய மரியாதையை தட்டி எழுப்பி விட்டது.
தளபதி கருத்துக்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ”இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது”என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கோ. தளபதியின் இந்த பேச்சுக்கு உடனடியாக கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணியும் உடனடியாக பதிலளித்துள்ளார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில் , “தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம். நீங்கள் மதுரையில் உள்ளீர்கள் . நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.களத்தில் செயல் படுவதில் கடுமையான நெருக்கடிகள் இருந்தாலும், கூட்டணி தர்மத்தை கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் நாங்கள் அனுசரித்து செல்கிறோம். அமைதி காக்கிறோம். இதுவரை , நாங்கள் எதிர்கொண்ட பல பிரச்சனைகளை பொதுவெளியில் பேசாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோம் .
அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதே நல்லது.தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் செயல்படும் முதலமைச்சரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கும். விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சி போன்றவை இந்த தேர்தலில் துணிச்சலாக முடிவெடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கொடுக்க போகும் விலை என்னவென்பது போகப் போகத்தான் தெரியும்.


