தேமுதிகவுக்கு 20 சீட்டுகள்.. அதிமுக, திமுக இரண்டு பக்கமும் துண்டு..!

Advertisements
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். அந்த வகையில் தேமுதிக நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாக கூறியுள்ள தேமுதிக விஜய பிரபாகரன் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது பற்றியும் வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக – பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. தவெக விஜய் கூட்டணி என்று அறிவித்தாலும் அவர்களுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேரவில்லை.
தேமுதிக, ராமதாஸ் பாமக, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், புதிய தமிழகம் கட்சி தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தேமுதிக கட்சியின் மாநாடு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. அதில் அந்தக் கட்சி கூட்டணி பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை.
திமுகவை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணியில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பாஜக மதுராந்தகத்தில் கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற்றது.
இதில் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். தேமுதிகவும் அதிமுக – பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளனர். மதுராந்தகம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரேதமலதாவிடம், பியூஷ் கோயல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் பிரேமலதா அந்த தகவலை மறுத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களை யாரும் அணுகவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தேமுதிக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பது பற்றி தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. கிருஷ்ணகிரியில் தேமுதிக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணி சம பலத்துடன் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் தலா 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறுகிறதோ அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். எல்லா கட்சிகளுக்கும் ஒரு கணக்கீடு இருக்கும். அப்படி எங்களுக்கும் கணக்கீடு உள்ளது. எங்கள் 20 முன்னாள் எம்எல்ஏக்கள் 20 பேருக்கு சீட் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னாள் எம்எல்ஏக்களுடன் புது முகங்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகள் என மொத்தம் 25 – 30 சீட் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *