M. H. Jawahirullah: கவர்னர் மீது திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் விமர்சனம்!

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேசினார்.

சென்னை: கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காகத் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது;

“தமிழக மக்களின் நலனுக்காக நாம் இயற்றக்கூடிய சட்ட முன்வடிவுகளை நிறுத்திவைப்பதற்கு கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள கோப்புகளைக் கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கவர்னர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்.

மசோதாக்களை நிறைவேற்றாமல் கவர்னர் கிடப்பில் போட்டது தொடர்பாக முதல் அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்தப் பிரச்சினை இதோடு நின்றுவிடக் கூடாது. பேரறிஞர் அண்ணா கூறியதுபோல ஆட்டுக்குத் தாடி தேவையில்லை. நாட்டுக்குக் கவர்னர் தேவையில்லை என்ற திசையை நோக்கிச் செல்லும்போதுதான், ஒன்றிய அரசின் பிரதிநிதியாக வரக்கூடிய சர்வாதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து   வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் பேசியதாவது;-“சொந்த சாதி, மத நலனை விரும்புபவர்களால் தேச நலனுக்கு ஆபத்து என அம்பேத்கர் பேசியதை நினைவு கூறுகிறேன். இந்திய அளவில் மிகப்பெரிய ஆளுமையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.

9 கோடி மக்களின் உரிமைக்கு எதிராகக் கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது. கவர்னரின் நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்டுள்ள சவால்.

அரசியலமைப்பு சாசனம் வேந்தர் என்ற பொறுப்பினை கவர்னருக்கு வழங்கவில்லை. வேந்தராகக் கவர்னர் இருக்கக் கூடாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.”இவ்வாறு சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *