
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
குரல் பரிசோதனை முடிந்த பின் ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், அவர் திமுக அனுதாபி தான் என்றும் கட்சி நிர்வாகி இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஞானசேகரன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் தொடர்புடையதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி சார் என யாரிடமோ பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அறிவித்தது.
அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே ஞானசேகரனுக்கு 7 ஆம் தேதி (நாளை) வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இன்று (பிப்.6) ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.
ஞானசேகரன் குரல் சோதனை செய்ய அனுமதி கேட்ட வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு, நீதிமன்ற உத்தரவின்படி இன்று குரல் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
குரல் பரிசோதனை முடிந்த பிறகு, காவல்துறையினர் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு இரத்த பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
