
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மக்கள் நீதி மக்கள், கொமதேக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தவாக உள்ளிட்ட கட்சிகள் இருந்து வருகின்றன.
அதேபோல் தேமுதிக மற்றும் பாமக ராமதாஸ் பிரிவையும் இணைக்க திமுக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இத்தனை கட்சிகளுக்கும் திமுக தலைமை எப்படி தொகுதிகளை பங்கீடு செய்யும் என்ற கேள்வியே பலரின் மனதில் உள்ளது. ஏனென்றால் கடந்த ஓராண்டாகவே விசிக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று பேசி வந்தனர்.
இம்முறை காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளது. குறிப்பாக விசிக இரட்டை இலக்க தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர். தவெக அரசியல் களத்தில் களமிறங்கி இருப்பதால், பல்வேறு கட்சிகளுக்கும் விஜய்யும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக தலைமை முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை 4 முனைப்போட்டி இருக்கும் என்பதால், எந்த சிறிய கட்சியையும் எளிதில் விட்டுவிடக் கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் குறியாக இருக்கிறார்.
பல தொகுதிகளிலும் சில வாக்குகளில் கூட வெற்றி, தோல்வி மாறக் கூடும். இதனால் 2016 சட்டசபைத் தேர்தல் போல் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று திமுக தலைமை ஒரு கணக்குக்கு வந்துள்ளது. அதாவது விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய 3 கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.
அதற்கு பதிலாக மதிமுகவுக்கு சில தொகுதிகளை குறைக்க முடிவு எடுத்திருக்கிறது. அதற்கு பதிலாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்க ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மதிமுக பிடி கொடுக்கவில்லை என்றால், வாழ்த்தி வழியனுப்பும் யோசனையில் இருக்கிறார்கள்.
அதேபோல் உதயசூரியன் சின்னம் மற்றும் சொந்த சின்னம் ஆகியவற்றில் நிற்பதை பொறுத்தும் சில தொகுதிகளை குறைக்க திமுக தலைமை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.



