Exam holiday:காலாண்டு தேர்வு லீவு பத்தாது! விடுமுறை நீட்டிக்கக் கோரும் ஆசிரியர்கள்!

Advertisements

சென்னை; பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறையை அக்டோபர் 7ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காலாண்டு தேர்வு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் தேர்வுகள் வரும் 27ம் தேதியுடன் நிறைவடைகிறது.

சிறப்பு வகுப்புகள்

செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதிவரை 5 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 5 நாட்களிலும் எவ்வித சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் தகவல்படி, 5 நாட்கள் விடுமுறையில் சனி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை நாட்களைக் கழித்தால் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படுவதாக மாணவர்கள் தரப்பினர் கூறி உள்ளனர்.

மாணவர்களின் கருத்து இப்படி இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும் முக்கிய கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது, விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை, விடைத்தாள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் எனக் கூடுதல் பணிகள் உள்ளதால் விடுமுறையை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

9 நாட்கள்

தற்போதுள்ள தகவல்படி அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை(அன்று அரசு விடுமுறை)யுடன் விடுமுறை முடிகிறது. அதற்கு அடுத்த 2 நாட்கள்(வியாழன், வெள்ளி) மட்டும் விடுமுறையை நீட்டித்தால் போதும். அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தேர்வு விடுமுறை 9 நாட்களாகிவிடும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி முடிவு

தற்போது பல்வேறு மாவட்டங்களில் பருவநிலை மாறி, வெப்பம் வாட்டி வதைப்பதையும் அரசு நிர்வாகம் மனதில் கொண்டு விடுமுறையை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆசிரியர்கள் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் தரப்பில் விடுமுறை நீட்டிப்பு அவசியம் என்று கூறப்பட்டாலும் இறுதி முடிவு அரசிடமே உள்ளதால் கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் காத்திருக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *