
தாராவி மறுசீரமைப்பு பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தாராவியை சர்வே செய்யும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாகத் தாராவி விளங்குகிறது. இங்குத் தமிழர்கள், மராத்தியர்கள், குஜராத்தி, இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். மும்பையில் குடிசை இல்லா நகராமாக்க அரசு பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வருகிறது.
மகாராஷ்டிரா அரசு மற்றும் அதானி குழுமம் இணைந்து தாராவியை புனரமைக்க உள்ளது. இந்தத் திட்டத்திற்கு டிஆர்பிபிஎல் (தாராவி ரீடெவலப்மெண்ட் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிட்டெட்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாகத் தாராவிப் பகுதியைச் சர்வே செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தாராவியில் வசிக்கும் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்களின் தகவல்களைச் சேகரிக்க இன்று முதல் கணக்கெடுப்பு (சர்வே) பணியைத் தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு பணி தாராவி கமலா ராமன் நகர் சொசைட்டியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்குவதற்காக டிஆர்பி குழுவைச் சேர்ந்த 15 பேர் தாராவி பகுதிக்கு வந்தனர். காலை முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும், கடைகளுக்கும் சென்றும் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கினர்.
கணக்கெடுப்பின்பொழுது மக்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். திங்கட்கிழமை தொடங்கிய இந்தக் கணக்கெடுப்பு பணி டிஜிட்டல் சர்வே என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளுக்குள் சென்று அவர்களுடைய பெயர்!, எத்தனை பேர் வசிக்கிறார்கள்! குடும்பத்தில் எத்தனை பேர்? வீட்டின் அளவு என்ன! மேல் தளங்களில் யாருடையது! யார் பெயரில் வீடு உள்ளது! வீடு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதா? வாடகை வீட்டில் வசிப்பவரின் பெயர் என்ன? அதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து தங்களுடைய மடிக்கணினியில் சேமிக்கின்றனர்.
கணக்கெடுப்பு பணி முடிந்ததும் அவர்களுக்கென்று டிஆர்பி/ஜிஎன்/யூனிக் எண்கள் வழங்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் சுவற்றில் பெயிண்டிங் மூலம் எண்களைத் தீட்டுகின்றனர். இந்தச் சர்வே முடிந்த ஓரிரு வாரத்திற்குள் அதனை ஆய்வு செய்வதற்காக வேறு அதிகாரிகள் வருவார்கள். அவர்கள் தாங்கள் கொடுத்த தகவல் உண்மைதானா என்பதை தெரிந்துக் கொள்வார்கள். பின்னர் ஆவணங்களைச் சரிப்பார்ப்பார்கள்.இதுகுறித்து தாராவி மறுசீரமைப்பு திட்ட லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறுகையில்,” கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தங்களுடைய பணி சிறப்பாக நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புவாசிகள் மிகக் கவனமாகவும், துல்லியமாகவும் தகவல்களைக் கொடுங்கள்
ஆகையால், பொதுமக்கள் மிகக் கவனமாகவும், துல்லியமாகவும் தகவல்களைக் கொடுக்கவும். அந்தத் தகவல்தான் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயன்படும். பொய்யான தகவல் அல்லது முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தால் அடுத்தடுத்த கட்டங்களில் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும்.
இதில் டிஆர்பி என்றால் தாராவி ரீடெவலப்மெண்ட் ப்ரொஜெக்ட் என்று பொருள். ஜி.என் என்றால் வார்டு பெயர் (ஜி/நார்த்) என்று பொருள்.ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் ஒரிஜினலை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடைகள், சமுதாயக் கூடம், வழிப்பாட்டுத் தளங்கள் என்று அனைத்தையும் சர்வே செய்து வருகின்றனர்.
தாராவி முழுவதும் இந்தக் கணக்கெடுப்பு பணி முடிவதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.முன்மொழியப்பட்ட மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களின் மறுவாழ்வுக்கான தகுதிகளைத் தீர்மானிக்க, இந்தக் கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்
கப்பட்ட தரவை மாநில அரசு பயன்படுத்தும். கணக்கெடுப்பில் முதல் முறையாக ‘டிஜிட்டல் தாராவி’ என்ற நூலகமும் கட்டப்பட உள்ளது. தாராவி குடியிருப்பாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் 1800-268-8888 என்ற இலவச எண் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
டிஆர்பிபிஎல் அறிக்கை:
தாராவி மறுசீரமைப்புத் திட்டம் (டிஆர்பி) மற்றும் மகாராஷ்டிரா அரசின் இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய புனரமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும் என்று டிஆர்பிபிஎல் செய்தி தொடர்பாளர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். மும்பையில் குடிசை இல்லாத நகரமாக்குவதற்கான முதல் படி இதுவாகும். இது தாராவியை நவீன நகரமாக மாற்றுவதற்கான தொடக்கமாகும். தாராவி குடியிருப்பாளர்கள் அனைவரும் இந்தப் பணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தாராவி ரீடெவலப்மெண்ட் புரொஜெக்ட் பிரைவேட் லிமிட்டெட் (டிஆர்பிபிஎல்) என்பது மகாராஷ்டிரா அரசு மற்றும் அதானி குழுமத்தின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும். டிஆர்பிபிஎல் ஆனது தாராவிகாரர்களுக்கு நவீன வீடுகளை வழங்குவதன் மூலமும் அவர்களின் உள்ளார்ந்த தொழில் முனைவோர் உணர்வைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் வாழ்க்கையை மாற்றவும் மேம்படுத்தவும் பாடுபடுகிறது என்று தங்களுடைய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


