சபரிமலை ஐயப்பன் கோவிலில் எதிர்க்கட்சிகள் அமளி.!

சபரிமலை ஐயப்பன் கோவிலின் கருவறைக் கூரையில் வேயப்பட்டிருந்த பொன் தகடுகள் காணாமல் போனது பற்றிக் கேரளச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

1998ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குத் தொழிலதிபர் விஜய் மல்லையா முப்பது கிலோ தங்கமும், 1900 கிலோ செப்புத் தகடுகளும் நன்கொடையாகக் கொடுத்திருந்தார்.

செப்புத் தகடுகள் மேல் மெல்லிய தங்கத் தகடுகளை ஒட்டிக் கருவறைக் கூரையில் வேயப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு சீரமைப்புப் பணியின்போது 4 கிலோ தங்கத் தகடுகள் காணாமல் போனது. இந்த விவகாரத்தைக் கேரளச் சட்டமன்றத்தின் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் எழுப்பினார்.

அப்போது, இதற்குப் பொறுப்பேற்றுத் தேவசம் அமைச்சர் வாசவனும், திருவாங்கூர் தேவசம் வாரியத் தலைவரும் பதவி விலக வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது அவைத் தலைவர் சம்சீர், ஏற்கெனவே பட்டியலிட்ட வினாக்களை மட்டுமே உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து ஐயப்பனின் தங்கம் களவுபோய்விட்டது என்றும், கோவில் கொள்ளையர்களின் கூடாரமாகி விட்டது என்றும் கூறிப் பதாகைகளை ஏந்தியபடி அவையின் நடுப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அவைத் தலைவரைச் சூழ்ந்துகொண்டதையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்களும் இருக்கையைவிட்டு எழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.இதையடுத்து அவைத் தலைவர் சம்சீர், கேள்வி நேரத்தை ரத்துச் செய்துவிட்டு அவையைத் தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *