Advertisements

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகும் அதிமுக வேட்பாளர் யார்? அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் திமுக வேட்பாளர் யார்? இந்த தொகுதி ஒருவேளை மதிமுகவுக்கு ஒதுக்கப்படுமா? என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் முதன்முதலாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து அந்த தொகுதி முழுவதும் தற்பொழுது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. தொகுதி முழுவதும் அதிமுகவினரும் திமுகவினரும் மற்றும் மதிமுகவினரும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தீவிர தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார்கள் .
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் தொகுதி ஆகும் . இது பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். இங்கு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 416 பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள் .ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 484 ஆன் வாக்காளர்கள் இருக்கிறார்கள் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 99 வாக்காளர்கள் இருக்கிறார்கள் .
இந்த தொகுதியில் பெரும்பான்மை மக்களாக இஸ்லாமிய மக்கள் 45 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக தேவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள் .மேலும் முதலியார் யாதவர் நாடார் சமுதாயத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் இங்கு இருக்கிறார்கள் .
கடையநல்லூர் தொகுதியில் 1971 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை மொத்தம் 12 முறை சட்டமன்ற தேர்தல் நடந்திருக்கிறது இதில் அதிமுக ஆறுமுறையும் திமுக மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன . காங்கிரஸ் முஸ்லிம் லீக் சுயேட்சை என தல ஒருமுறை வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் அதிமுக அமைச்சர் அவையில் இடம் பெற்றிருந்த செந்தூர்பாண்டியன் என்பவர்.
அதிமுக சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு செந்தூர்பாண்டியன் இந்த தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் இவர்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார் . இதற்கு முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
அதேபோல் 1991 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட நாகூர் மீரான் பின்னர் அமைச்சரானார் . இதேபோல் அதற்கு முன்னதாக 1989 ஆம் ஆண்டு இந்த பகுதியில் பிரபலமான சம்சுதீன் என்ற கதிரவன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சட்டசபை கொறடாவாகவும் பதவி வகித்தார் .அதற்கு முன்னதாக 1977 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் இந்த பகுதியில் பிரபலமான எம்எல்ஏ ரசாக் வெற்றி பெற்றார் .
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு முழுவதும் திமுக அலை வீசிய போதிலும் கடையநல்லூரில் அதிமுக வேட்பாளரான கிருஷ்ண முரளி வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் ஆவார்
சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் தேவர் இனத்தைச் சார்ந்தவர்.
செங்கோட்டையைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் 88,474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் இது 43.8 சதவீத வாக்குகள் ஆகும் . இவரை எதிர்த்து போட்டியிட்ட முகமது அபுபக்கர் 64 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்றார். இது 31.22 சதவீத வாக்குகள் ஆகும். இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அய்யாதுரை பாண்டியன் போட்டியிட்டு 34 ஆயிரத்து 216 வாக்குகள் பெற்றார் .
தற்பொழுது கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரையில் அதிமுக வேட்பாளராக மீண்டும் குட்டியப்பா என்கிற கிருஷ்ண முரளி தான் களம் இறங்குகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர் தொகுதி முழுவதும் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார் .
இந்த தொகுதி மக்களை பொருத்தவரையில் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி மீது தனிப்பட்ட அன்பு வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் . காரணம் மிகவும் எளிமையானவர் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருடனும் நெருங்கி பழகக் கூடிய குணம் கொண்டவர். அதேபோல் மக்கள் குறைகள் தொடர்பாக முறையீடு செய்தால் அதனை உடனடியாக செய்து கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர். இஸ்லாமியர்கள் மத்தியிலும் இவருக்கு மிகுந்த மரியாதை உண்டு.
இது தவிர தேர்தல் சமயங்களில் தாராளமாக பண செலவு செய்வதுடன் தொகுதி முழுவதும் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார் . குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி தேர்தல் களத்தில் இறங்கினால் அதிமுகவில் உள்குத்து எதுவும் இல்லாமல் அனைவருமே ஒற்றுமையாக வேலை செய்வார்கள் என்பது தொகுதி மக்கள் நன்கு அறிந்தது .
எடப்பாடி பழனிச்சாமி உடன் மிக நெருக்கமாக இருப்பதால் இந்த தொகுதியில் இவர் வெற்றி பெற்று அதிமுகவும் வெற்றி பெற்றால் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அமைச்சர் பதவியை எட்டிப் பிடிப்பார் என்று பேசப்படுகிறது . இந்த நிலையில் திமுக தரப்பில் இரண்டு பேர் விருப்ப மனு தாக்கல் செய்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ஒருவர் தற்பொழுது திமுக பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் எஸ் எம் ரஹீம் என்பவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர் , தொடர்ந்து 30 ஆண்டுகளாக திமுகவில் பணி செய்து வருகிறார். செங்கோட்டை நகர செயலாளராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இது மட்டுமல்லாமல் தொகுதி மக்கள் அனைவரிடமும் அன்புடனும் பாசத்துடனும் பழகக் கூடியவர். இந்த தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை திமுக மேலிடம் மூலமாக பெற்றுத் தந்தவர் என்ற பெருமைக்குரியவர்.
தொகுதி முழுவதும் இவருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. தேவையான பணபலமும் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடையநல்லூர் தொகுதியில் திமுக தரப்பில் பல கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை பட்டியலிட்டு பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க எஸ் எம் ரஹீம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எஸ் எம் ரஹீம் இஸ்லாமியர் என்பதாலும் பணபலம் உள்ளவர் என்பதாலும் அதிமுக வேட்பாளர் குட்டியப்பாவுக்கு சவால் விடும் வேட்பாளராக கருதப்படுகிறார். இவரைப் போலவே இந்த தொகுதியில் திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளராக இருக்கும் செண்பக விநாயகம் என்பவரும் விருப்ப மனு தாக்கல் செய்கிறார் .
சித்த மருத்துவர் ஆன இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் பணியாற்றி வருகிறார் . இவரது தந்தை சுடலை ஆண்டி செங்கோட்டை நகர திமுக செயலாளராக நான்கு முறை பணியாற்றியவர் . திமுக ஆலோசனை குழு தலைவராகவும் தொழிற்சங்க தலைவராகவும் இருந்தவர். திமுக மீது தீவிர பற்று கொண்டவர்.
மருத்துவர் செண்பக விநாயகம் சிவகிரியில் சொந்தமாக மருத்துவமனை மற்றும் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் படிக்கும் காலத்திலேயே திமுக மாணவர் அமைப்பை வழி நடத்திச் சென்றவர். பள்ளி பருவம் முதலில் திமுக மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் சமீபத்தில் திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார் .
திமுக அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இந்த தொகுதி முழுவதும் திமுக சார்பில் ஏராளமான மருத்துவ முகாம்களை நடத்தி இருக்கிறார் இது மட்டுமல்லாமல் தற்போது சிவகாசி தொகுதி திமுக மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகிறார்
இதற்கிடையே, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் ராணி ஸ்ரீகுமார் 4 லட்சத்து 25 ஆயிரத்து 679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டு 2 லட்சத்து 29 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்றார் .
இதில் ராணி ஸ்ரீ குமாரின் வெற்றிக்காக பாடுபட்டவர்களில் எஸ்.எம் ரஹீமும் செண்பக விநாயகமும் முக்கியமானவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கடையநல்லூர் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் ஒரு பரபரப்பு தகவல் பேசப்படுகிறது. மதிமுகவை பொறுத்த வரையில் அந்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கும் தி.மு. ராஜேந்திரனுக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது .
தி.மு.ராஜேந்திரன் மதிமுக தலைவர் வைகோவுக்கும் துரை வைகோவுக்கும் மிகவும் நெருக்கமானவர் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆக நீண்ட காலம் பணியாற்றியவர் .சங்கரன்கோவில் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் எம் காம் படித்து பட்டம் பெற்றவர். சங்கரன்கோவில் தொகுதியில் முன்னாள் அமைச்சராக இருந்த தங்கவேலு தேர்தலில் போட்டியிட்ட சமயத்தில் அவருக்காக தீவிர பணிகள் செய்தவர். சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்.
இவரது பேச்சைக் கேட்பதற்காகவே திரளான கூட்டம் கூடும் என்பது முக்கிய தகவலாகும். சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதோடு தேவர் இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடையநல்லூர் தேர்தல் களத்தை பொருத்தவரையில் மக்களிடம் நெருக்கமாக பழகியவர் மற்றும் பணபலம் உள்ளவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது .
அந்த வகையில் அதிமுக வேட்பாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி முதல் இடத்தில் இருக்கிறார் இரண்டாவது இடத்தில் எஸ் எம் ரஹீம் இருக்கிறார் மதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தி.மு. ராஜேந்திரனுக்காக கட்சி மேலிடம் போதிய அளவு பணச் செலவு செய்யும் என தெரிகிறது. இதே போல் மருத்துவர் செண்பக விநாயகமும் தேர்தல் களத்தில் போதிய அளவு செலவு செய்யும் பண வசதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கடையநல்லூர் தொகுதியை பொறுத்தவரையில் எஸ்.எம் ரஹீம் மருத்துவர் செண்பக விநாயகம் திமு ராஜேந்திரன் ஆகிய மூவரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என தெரிகிறது. எனவே கடையநல்லூர் தொகுதி தேர்தல் களம் மிகப்பெரிய போர்க்களமாக இருக்கும் என தெரிகிறது. இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் ஒன்பது சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பாக இருக்கிறது.
Advertisements


