தீபாவளிக்கு ரெடியாகும் இட்லி – குடல்கறி, சுடச்சுட ஆட்டுக்கால் பாயா – தமிழ்நாட்டில் மட்டும் அசைவம் ஏன்?
தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகமாக அசைவ உணவு வீட்டில் இடம்பெறுவது ஏன்? என பலருக்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு வரலாற்று தொடர்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி திருவிழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், அதனை ஒவ்வொரு பகுதியிலும் தங்களுக்கே உரிய பாணியில் கொண்டாடுகின்றனர். வட நாட்டில் லட்சுமி தேவிக்கு விரதம் இருக்கிறார்கள். அப்போது சைவ பதார்த்தங்களையெல்லாம் படையிலிட்டு பயபக்தியோடு தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடும் அதேவேளையில் தமிழ்நாட்டில் மட்டும் அன்றைய நாளில் இட்லி – குடல்கறி, ஆட்டுக்கால் பாயா என சுடச்சுட அசைவ வகைகள் ரெடியாகிக் கொண்டிருக்கும்.
தீபாவளி தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெறும் சந்தைகளில் ஆடு மற்றும் கோழிகள் எல்லாம் கோடி கணக்கில் விற்பனையானது என்று செய்திகளில் வருவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். இந்த உணவு முறை மாற்றம் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கு விரிவாக விளக்கம் அளித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் தொ.பரமசிவன், தீபாவளிக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார். விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு தீபாவளி என்றொரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடவில்லை என கூறியிருக்கும் அவர், சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் எதனையும் பார்க்க முடியாது என்கிறார். மேலும், தீபாவளி வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான பண்டிகை, இது புராணக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட பிராமணிய பண்டிகை என்றும் கூறியுள்ளார்.
அப்படி இருக்கையில் தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஊடுருவிய பிறகும் உணவு முறையில் மட்டும் அந்த வித்தியாசம் தொடர்கிறதே அது எப்படி என்ற கேள்விக்கு விடை தேடும்போது, தமிழர்கள் சங்க இலக்கிய காலம் தொட்டே கொண்டாட்ட காலத்தில் அசைவ உணவுகளை உண்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்தில் இருக்கும்போதும், விருந்தினரை உபசரிக்கும்போதும் புலால் உணவுகளை வைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதையே பெருமையாக கருதியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சி தான் இப்போதும் எந்தவொரு கொண்டாட்டத்தின்போதும் இயல்பாகவே அசைவ உணவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும், தீபாவளி பண்டிகை என்பதே விநாயகர் சதூர்த்தி போல் தமிழ்நாட்டில் இறக்குமதியான பண்டிகையே தவிர, இது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை எல்லாம் கிடையாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் பார்க்கும்போது, தீபாவளி பண்டிகையான நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழ்நாட்டில் பெரும்பாலானோரின் வீடுகளில் காலை அல்லது மதியம் இட்லி – குடல் கறி குழம்பு, ஆட்டுக்கால் பாயா, கோழிக் கறி வருவல், மட்டன் தண்ணிக் குழம்பு உள்ளிட்ட விதவிதமான அசைவ உணவுகள் தயாராவதை நீங்கள் பார்க்கலாம்.