திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாகப் பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.