சென்னை:
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், “அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்” என்று தான் என்னைச் சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான்.
போராடலாம், தவறு இல்லை; போராட வேண்டிய இடத்தில் போராடலாம், போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம், தவறில்லை. இத்தகைய போராட்டங்களுக்குரிய காலத்தில் அனுமதி கேட்டால் நாங்கள் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்.
சட்டம்-ஒழுங்கைப் பற்றிச் சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசில் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள்மேல் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது.