
புதுடில்லி: டில்லியில் கட்டப்பட்ட ராணி ஜான்சி பாலம் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் டில்லி சட்டசபையின் செயலாளர் மத்திய உள்துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் வடக்கு பகுதியில் செயிண்ட் ஸ்டீபன் மருத்துவமனையை இணைக்கும் அளவில் 1. 8 கி.மீட்டர் தொலைவில் கட்டப்பட்டது ராணி ஜான்சி பாலம். இதன் மதிப்பு 724 கோடி. இந்தப் பாலம் அமைப்பதற்கென நிலம் கையகப்படுத்தப்பட்டதில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதிக்கணக்கில் முறைகேடு நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பலஆண்டு இழுவைக்குப் பின் கடந்த 2018 ல் இந்தப் பாலம் திறக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக 2022 ல் லோக்பால் கோர்ட் உத்தரவின்படி விசாரணை நடந்தது.
விசாரணையில் இந்தக் காலக்கட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகச் செயல்பட்டவர் ராஜ்குமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ராஜ்குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கத் தேசிய தலைமையக சிவில் சர்வீஸ கமிஷன் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
‘இந்தக் குற்றம் தொடர்பாக என்னிடம் உயர் அதிகாரிகள் எவ்வித விளக்கமும் கேட்காமல் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை’ என்றார் ராஜ்குமார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நேரத்தில் டில்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாமென டில்லி மூத்த அமைச்சர்கள் கூறிவரும் நிலையில், சட்டசபை செயலர் சஸ்பெண்ட் முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.


