
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது,
இந்திய வரலாற்றில் தங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த பட்ஜெட் இதுதானென நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.
மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது போன்ற நிவாரணம் கிடைத்தது இல்லை.
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகிய 4 தூண்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மோடியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமாக மத்திய பட்ஜெட் உள்ளது.
சுற்றுலா மற்றும் உற்பத்தி போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இது இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.
பிப்ரவரி 8-ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டு மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்திற்குள் பெண்கள் ரூ.2,500 பெறத் தொடங்குவார்கள் என்பதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் உள்பட அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி ஊழல் செய்துள்ளது.
தங்கள் கட்சிமீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை ஆம் ஆத்மி உணர்ந்துள்ளது.
இதனால் அவர்கள் தினமும் போலி வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
