
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வாயில் நுரை தள்ளியபடி பெண் ஒருவர் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட விவகாரத்தில், பெற்ற தாயே, அவருக்கு முட்டை பொரியலில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞரின் காதலை விட மறுத்ததால் இத்தகைய அதிர்ச்சிகரமான செயலை அவர் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லை (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.
இந்த நிலையில் முல்லை, சாய்ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இது முல்லையின் தாய்க்கு தெரியவந்து அதைக் கண்டித்தாராம். ஆனால் முல்லை, காதலை கைவிட மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஜாதி, ஜனம், சொந்த பந்தத்திற்கு அஞ்சிய தாய், மகள் முல்லையை மிரட்டுவதற்காக முட்டை பொரியலில் எலி பேஸ்ட்டை கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது.
ஆனால் சிறிதளவு சாப்பிட்டதுமே குறிஞ்சிக்கு வாயில் நுரைதள்ளியபடி கிடந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணனும், தந்தையும், அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புகாரின் பேரில் முல்லையின் தாயை வடபொன்பரப்பி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிஞ்சிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
